ஆலய அமைப்பு

இவ்வாலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், முஷிகம், பலிபீடம், கொடி மரம் என்பவற்றை கொண்ட ஸ்தம்ப மண்டபமும் அமைந்துள்ளன. உள்வீதிப் பிரகாரத்திலே அக்கினி மூலையில் பாகசாலையும் (மடப்பள்ளி), அதைத் தொடர்ந்து களஞ்சிய அறை, வாகன சாலை, குரு வாசம் என்பனவும், கர்ப்பக்கிரகத்திற்கு மேற்கே நாகதம்பிரான் சந்நிதியும், கர்ப்பக்கிரகத்திற்கு வடக்கே சண்டேஸ்வரர் சந்நிதியும், ஈசான மூலையிலே வசந்த மண்டபம் அதையடுத்து யாகசாலை, வைரவர் சந்நிதி, மணிக்கூடு என்பன அமைந்துள்ளன. ஆலயத்திற்கு கிழக்கே நாயன்மார்கட்டு குளம்(தாமரைக் குளம்) அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். சதுர்த்தி உற்சவ சிறிய விநாயகர், எழுந்தருளி விநாயகர், பஞ்சமுக விநாயகர், சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான், மீனாட்சி அம்மன், வேலாயுதப் பெருமான், சந்தான கோபாலர், மாணிக்கவாசகர், சண்டேஸ்வரர் ஆகிய எழுந்தருளி மூர்த்தங்களும் அமைந்துள்ளது.